இரவு 11.45 கடைசி இரயில் ,உச்சகட்ட கூட்ட நெரிசலில் , ஒருவர் கால் மீது ஒருவர் கால் வைத்தப்படி புறப்பட்டது அந்த ரெயில் . வியர்வையில் உடல் முழுவதுமாய் நினைய , துடைக்க எடுக்கும் கைக்குட்டையிலும் வியர்வை நீர் கொட்டியபடி இருந்தது . இவன் முகம் அவன் முகத்தோடு உராய , அவன் மூச்சுக் காற்றை இவன் சுவாசிக்க , அருவெறுப்பை அதிகம் கொண்டது அந்த தினசரி ரெயில் பயணம். திடீரென்று வரும் கைபேசியின் அழைப்பை எடுக்கக்கூட முடியாமல் அலைமோதும் கூட்டம் , யார் அழைக்கிறார்கள் , யார் அழைத்திருப்பார்கள் என மன போராட்டம் ஒரு பக்கம் , நடுவழியில் signal என்ற பெயரில் சில மணித்துளிகள் தாமதம் ஆகவும் வாய்ப்புள்ளது . வீட்டிற்கு என்ன பொருட்கள் வாங்க சொன்னார்கள் என சிந்தித்துக் கொண்டே , ஏதோ நியாபகத்தில் பயணித்தபடி , இந்த சகிப்பையெல்லாம் தாண்டி நாம் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அப்பாடா என்ற பெருமூச்சு விட்டு இறங்கியதும் , அலைமோதும் கூட்டத்தின் நடுவே நமக்கென தனி பாதையை கண்டறிந்து இரயில் நிலையத்தை விட்டு வெளியே நடக்க தொடங்கியதும் ,
நாம் தினசரி பயணிக்கும் தூரத்தை துல்லியமாக மனதில் கணக்கு வைத்துக்கொண்டு, அந்த தெருவிளக்கின் கீழ் , சிகப்பு நிற scooty pep வண்டியில் வெள்ளை நிற நைட்டியில் ரோஜா பூக்கள் தூவி விட்டது, போன்ற வடிவம் கொண்ட ஆடையை அணிந்து , நைட்டிக்கும், மேல் அணியும் துப்பட்டாவிற்கும், சம்பந்தம் இல்லா நிற ஷாலை அணிந்த படி, நடு இருட்டிலும் பளீர் என்ற புண்ணகை முகத்தோடு காத்திருந்தாள் மனைவி. வண்டியை வேகமாக ஓட்டி வந்ததால் கலைந்த முடியை கண்ணாடி பார்த்து சரி செய்தபடி ,அவன் வருகையை எதிர் பார்த்து வண்டிமேல் அமர்ந்திருக்க ?
கூட்டத்திலிருந்து கலைந்து, முதலில் தெரு விளக்கு கம்பத்தை பார்த்த அவன், தன் கண்பார்வையை மெல்ல கீழே இறக்கி அவளின் சிரித்த முகத்தை பார்த்தபடியே சற்று வேகமாக நடக்க தொடங்கினான். நடந்து செல்லும்போதே உதிர்ந்த இலை ஓன்று அவள் தலை மேல் விழ , தன் கணவனை பார்த்த படியே அவள் உதறிவிட , கணவனுக்கோ அந்த 30அடி தூரம், பல மணி நேரம் கடந்து செல்வது போல் முகபாவனை காட்டியபடி கடந்தான் . சலிப்பு தட்டாத அந்த இடது கண் புருவ தழும்பு , எத்தனை முறை மேல் நோக்கி விட்டாலும் அவள் வலது கன்னத்தை மறைக்க நினைக்கும் சில முடிகள் , ரசித்தபடியே வந்தான். கணவன் அருகே வந்தவுடன் வெட்கபடாமல் ஒரு இயல்பு சிரிப்பை பரிசாக்கிக்கொண்டே , தன் துப்பட்டாவால் அவன் வியர்வையை துடைக்க ஆரம்பித்தால் . ஒரு கை வியர்வையை துடைக்க , மறு கை அவன் கலைந்த தலை முடியை வகுடு எடுக்காமல் சீவிக் கொண்டுருந்தது . மதிய ’’சாப்பாட்டை ஃப்புல்லா சாப்டீங்களா’’ இல்ல மிச்சம் வச்சிட்டீங்களா , என கோபமே படாமல் , கோபப்படுவது போல் கேட்டு விட்டு சரி வண்டியை ஓட்டுங்க என சொன்னாள், நீ ஒட்டு டீ , முடியல என அவன் சொல்ல சரி உட்காரு என உரிமையாய் சொல்லி , வண்டியை திருப்பி சென்றாள் . அவள் பின்னால் உட்கார்ந்த கணவன் அவள் இடுப்பை மெதுவாக வருடிக்கொண்டே அவள் முதுகின் மேல் சாய்ந்தபடி வீட்டிற்கு செல்லும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் அமையாது ...
No comments:
Post a Comment